தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகத்தின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று (ஏப்.28) சென்னை தி.நகரில் உள்ள பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயற்குழு கூட்டத்தில் 2015-2018க்கான நிர்வாகத்தின் பதவிக்காலம் 2019 ஏப்.30ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் நாள், தேர்தல் நடக்கும் இடம், மற்றும் தேர்தல் அதிகாரி தலைமையில் தேர்தல் நடத்துவது, தேர்தல் சம்பந்தமான அறிக்கைகளை உறுப்பினர்களுக்கு பொதுச்செயலாளர் தெரியப்படுத்துவது போன்ற அனைத்திற்கும் நிர்வாக குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், ரமணா, உதயா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.