டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ லைவ் ஆக்ஷன் திரைப்படத்திற்கு பாடலாசிரியரும், எழுத்தாளருமான மதன் கார்க்கி தமிழில் வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த டிஸ்னி, தற்போது ‘தி லயன் கிங்’ என்ற படத்தை அதி நவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி வருகிறது. முன்னதாக அனிமேஷனில் உருவாக்கப்பட்ட இப்படம், வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களால் ரசிகர்கள் மனதை வென்றது.
தற்போது, மிக பிரம்மாண்டமாக உருவாகியுள ‘தி லயன் கிங்’ படத்தை பெரிய திரையில் லைவ்-ஆக்ஷன் வெர்ஷனை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில், இதன் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு பாடலாசிரியரும், எழுத்தாளருமான மதன் கார்க்கி வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மதன் கார்க்கி கடந்த 10 ஆண்டுகளில், நவீன இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படங்களான எந்திரன், கோ, துப்பாக்கி, கத்தி, பாஜிராவ் மஸ்தானி, பாகுபலி படங்கள், நடிகையர் திலகம், பத்மாவத் மற்றும் 2.0 போன்ற படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். அவர் தற்போது டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ படத்திற்கு தமிழில் வசனம் எழுதுவது தமிழ் ரசிகர்களுக்கு ஓர் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மதன் கார்க்கி, ‘நான் டிஸ்னியின் கிளாசிக் திரைப்படங்களை பார்த்து ரசித்தவன். அவர்களின் கதை சொல்லல் ஈடு இணையற்றது. லயன் கிங் அனைத்து தலைமுறைகளுக்கும் பிடிக்கும் ஒரு கதை. இந்த கதையை நம் உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்றவாறு எழுதுவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. கதையின் அசல் சிந்தனை மற்றும் சுவையை தக்க வைப்பதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்தேன். ஆனாலும் ரசிகர்கள் தங்கள் விருப்பமான மொழியில் அதைப் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக சில வேடிக்கையான உள்ளூர் விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன்" என்றார்.
‘அயர்ன் மேன்’ மற்றும் 'தி ஜங்கிள் புக்' புகழ் இயக்குனர் ஜான் ஃபேவரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் 'தி லயன் கிங்' சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். டிஸ்னியின் 'தி லயன் கிங்' திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.