பிரான்ஸ் அரசின் உயரிய விருது பெறும் பிரபல இந்திய இசைக் கலைஞர் அருணா சாய்ராம்.!
முகப்பு > சினிமா செய்திகள்Also Read | “செருப்பால அடிப்பேன்..” .. வெடிக்கும் தனலட்சுமி - ராபர்ட் சண்டை.. பரபரப்பில் ஹவுஸ்மேட்ஸ்.!
![Carnatic vocalist Aruna Sairam gets French govt Chevalier Award Carnatic vocalist Aruna Sairam gets French govt Chevalier Award](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/carnatic-vocalist-aruna-sairam-gets-french-govt-chevalier-award-photos-pictures-stills.jpeg)
கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார்.
தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் குடியரசின் கலாச்சார அமைச்சர் ரீமா அப்துல் மலாக் அறிவித்துள்ளதாக சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே கூறினார்.
இது தொடர்பில், "இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு உங்களின் ஏராளமான பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும்", என்று லிஸ் கூறினார்.
மேலும், "கர்நாடக இசையின் அற்புதமான அழகையும் நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பரப்பியுள்ளீர்கள். இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மீது நீங்கள் எப்போதும் கொண்டுள்ள நட்பை குறிக்கிறது. உங்கள் செயல்பாடு மற்றும் உங்கள் படைப்புகள் மூலம் கர்நாடக இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். பிரெஞ்சு கலைஞர்களுடனான உங்களின் பல கூட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிரான்சில் அடிக்கடி நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம், பிரான்ஸ் மற்றும் இந்தியாவை நெருக்கமாக கொண்டு வரவும், இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நீங்கள் பெரிதும் பங்களித்துள்ளீர்கள்", என்றும் அவர் கூறினார்.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அருணா சாய்ராம் கூறுகையில், "ஒரு இசைக்கலைஞராகவும், நமது நாட்டின் கலாச்சார வாரிசாகவும் எனது கடமையை செய்ததற்காக இதுபோன்ற ஒரு உயரிய விருதை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், நான் செய்து வரும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இது வழங்குகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்," என்றார்.
அருணா சாய்ராம் தனது தாயார் ராஜலட்சுமி சேதுராமனிடம் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் அவர் புகழ்பெற்ற பாடகர் சங்கீதா கலாநிதி டி. பிருந்தாவின் சீடரானார், இதன் மூலம் 8 தலைமுறைகளுக்கும் மேலாக தஞ்சை பாரம்பரியத்தின் புகழ்பெற்ற பெண் பாடகர்களின் வரிசையைத் தொடர்ந்தார். பின்னர், அவர் நம் நாட்டின் பல முன்னணி வித்வான்களிடம் பயின்றார். தேசிய மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்களுடன் அவர் பணியாற்றியதன் மூலம் மெல்லிசையை ஒரு மொழியாகப் பயன்படுத்தி எல்லைகள் கடந்து கொண்டு சென்றார்.
உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தனது அறிவை பகிர்ந்துகொள்வதில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காகவே நாதயோகம் அறக்கட்டளையை நிறுவினார். அருணா சாய்ராம் இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும் பெற்றுள்ளார். அத்துடன் சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தவிர தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் மத்தியப் பிரதேசத்தின் காளிதாஸ் சம்மான் விருதும் பெற்றவர். அருணா சாய்ராம் அமெரிக்க காங்கிரஸின் " உயர் சிறப்பு விருதை" பெற்றுள்ளார். மேலும், நியூயார்க் நகரம் மற்றும் சான் டியாகோ நகரங்களில் மேயரிடம் இருந்து பாராட்டை பெற்றுள்ளார்.
Also Read | "சாப்பாடே இறங்கல... அசல்க்கும் எனக்குமான ஃப்ரண்ஷிப் உங்களுக்கு புரியலடா.." நிவாஷினி