2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது.
அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. சிம்பாவின் தீங்கு விளைவிக்கும் மாமா கதாபாத்திரமான ஸ்கார், மிகவும் அச்சுறுத்தும் வில்லனாக காலம் கடந்தும் நம் நினைவுகளில் சிறப்பாக பொறிக்கப்பட்டுள்ளது!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி இந்தியா, 90களின் கனவுக்கண்ணனும் மற்றும் தலைமுறைகள் தாண்டியும் தன் அபார நடிப்பிற்காக மதிக்கப்படும் அரவிந்த் சாமி, தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார் என்பதை அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். உண்மையில் அவரது வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது!
இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, "20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது" என்றார்.