நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டூடியோஸில் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருப்பதாக தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கிற்காக நடிகர் அருண் விஜய் வரும் ஜூலை.5ம் தேதி வரை கால் ஷீட் ஒதுக்கியுள்ளார்.
இப்படத்திற்காக வியட்நாம் நாட்டில் நடிகர் அருண் விஜய் தற்காப்பு கலைகளை கற்று, ஒரு பாக்ஸராக தனது உடலை தயார் செய்துள்ளார். சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’, ‘இரும்பு குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தற்காப்பு கலைஞரும் நடிகருமான Johnny Tri-Nguyen இடம் நடிகர் அருண் விஜய் பயிற்சி பெற்றார்.
இந்த படத்தை தவிர ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கிவரும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறார். பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி ரிலீசாகவுள்ளது.
#BOXER #பாக்ஸர் @arunvijayno1 @MathiyalaganV9 @immancomposer @Vivek_Director@ritika_offl @krishnanvasant @pganesh_madan @hinasafaa234 @SureshChandraa @itsjosephjaxson @ProRekha @DoneChannel1 pic.twitter.com/ALPhuEsqCc
— Etcetera Entertainment (@EtceteraEntert1) June 21, 2019