பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மேனேஜராக பணியாற்றிய ஷீதல் ஜெயின் மறைவையொட்டி அவரது இறுதி ஊர்வலத்தில் தனது குடும்பத்துடன் அமிதாப் பச்சன் கலந்துக் கொண்டார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அமிதாப் பச்சனுடன் இருக்கும் ஷீதல் ஜெயின் மும்பையில் கடந்த சனிக்கிழமை காலமானார். ஷீதலின் மறைவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தனது வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், ‘40 ஆண்டுகளாக எனது பணிச்சுமையை சுமந்தவர்.. நேர்மையான, மென்மையான, விடா முயற்சியுடன் செயலாற்றக் கூடியவர். இன்று அவரது இறுதி ஊர்வலத்தில் அவரை சுமக்கிறேன். இனி இவரை போல் ஒரு மனிதரை காணப்போவதில்லை. எனது பணியிடத்திலும், எங்களது செயல்பாட்டிலும் இனி ஒரு வெற்றிடம் இருப்பது நிச்சயம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஷீதலின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் ஷீதலின் உடலை சுமந்துச் செல்லும் புகைப்படங்களையும் அமிதாப் பகிர்ந்துள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு அமிதாப் பச்சன், கோவிந்தா இணைந்து நடித்த ‘படி மியான் சோட்டி மியான்’ படத்தையும் ஷீதல் தயாரித்துள்ளார்.