ஆசிய நீச்சல் Championship போட்டியில் வெள்ளிப்பதக்கம் மாதவனின் மகன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 26, 2019 03:39 PM
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஏசியன் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்

ஆசிய நீச்சல் கூட்டமைப்பு, இந்திய நீச்சல் சம்மேளனம் சார்பில் பெங்களூரூவில் ஏசியன் ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்களுடன் நடிகர் மாதவன் மகன் வேதாந்தும் கலந்துகொண்டார்.
வேதாந்த், ஏற்கனவே மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார். தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று கடந்த சில மாதங்களுக்கு முன் பெருமை சேர்த்திருந்தார். இதுபற்றி மாதவன் சமூக வலைத்தளங்களில் அப்போது பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஏசியன் ஏஜ் குரூப் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக முதல் முதலாகக் கலந்து கொண்டார் வேதாந்த். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
இதுபற்றி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், ’’ ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்காக கலந்துகொண்ட போட்டியில், வேதாந்தாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.