நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் அருகே தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த வழியாக வந்த நமீதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில் இது தொடர்பாக நமீதாவின் கணவர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், ''நாங்கள் ஏற்காட்டில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தோம். நாங்கள் வரும் வழியில் 3 இடங்களில் எங்களை நிறுத்தி அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சேலத்தில் சில அதிகாரிகள் எங்கள் காரை நிறுத்தி சோதனை செய்தனர். பின் இருக்கையில் எனது மனைவி நமீதா தூங்கிக்கொண்டிருந்தார்.
அதனை சுட்டிக்காட்டி தேவை இருந்தால் மட்டும் சோதனை செய்யுங்கள் என்றேன். ஆனாலும் சோதனைக்காக பின்புற கதவைத் திறந்தார். அப்போது கதவில் சாய்ந்து உறங்கிய நமீதா காரின் வெளியே சாயத் தொடங்கினார். அதற்கு மன்னிப்பு கேட்ட அதிகாரி, நமீதாவின் கைப்பையை சோதனையிட வேண்டும் என்றார். அதில் பெண்ணின் தனிப்பட்ட சில பொருட்கள் இருந்ததால் பெண் போலீஸ் ஒருவர் சோதனையிட வேண்டும் என நமீதா கேட்டுக் கொண்டார். இதுதான் தற்போது நமீதா அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என தவறாக பரப்பப்படுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.