எங்களது படத்தில் இனி அவர் நடிக்கமாட்டார்- பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிரடி முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மூத்த நடிகர் ராதாரவியை தங்களது படங்களில் இனி ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

KJR studios strong condemning statement on Radharavi- they will never cast him again

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, பெண்கள அவமதிக்கும் விதமாக பேசியதுடன், நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

நடிகர் ராதாரவியின் இத்தகைய சர்ச்சை கருத்துக்கு திரையுலகை சார்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவை வைத்து ‘அறம்’ தற்போது ‘ஐரா’ ஆகிய படங்களை தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண்களை அவமதிக்கும் விதமாக பேசிய நடிகர் ராதாரவி குறித்து அந்த அறிக்கையில், ‘ராதாரவி மிகுந்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். மரியாதை என்பது பெயரால் வருவது அல்ல, நாம் பேசும் வார்த்தைகள், செயல்களால் வருவது தான். தமிழ் சினிமாவில் இருந்து கொண்டே பெண்களுக்கு எதிராகப் பேசுபவரையும், கீழ்த்தரமாக நினைப்பவரையும் துரத்தி அடிக்க விரும்புகிறோம்.

நடிகர் ராதாரவியின் பேச்சை உண்மையாகவே வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் திரைப்படங்களில் அவர் நடிக்க அனுமதிக்கமாட்டோம். திரையுலகில் இருக்கும் சக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராதாரவியை எந்த திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.