இது எப்படி இங்க வந்துச்சு.. அடர்ந்த காட்டுக்குள்ள நிற்கும் பிரம்மாண்ட விமானம்.. மேப்பை ஆராயும்போது தெரியவந்த விஷயம்.. வைரல் புகைப்படம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவின் பிரம்மாண்ட மழைக்காடுகளுக்கு நடுவே விமானம் இருப்பது போன்ற கூகுள் மேப் புகைப்படம் தற்போது சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கூகுள் மேப்
புதிய பாதைகளை கண்டறிவது நம்முடைய வாழ்க்கையை எப்போதும் சுவாரஸ்யமாக மாற்றும். அப்படியான நெடுந்தூர பயணங்களின் போது பாதைகளை கண்டறிய ஆதிகாலம் முதலே மனிதன் புவியியல் வரைபடத்தை பயன்படுத்தி வந்தான். டெக்னாலஜி துறையில் மனித குலம் முன்னேற முன்னேற நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அதற்க்கு ஏற்றாற்போல மாறின. அந்த மாற்றத்தின் விளைவாக தற்போது கூகுள் மேப் என்னும் டிஜிட்டல் வழிகாட்டி கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மேப்பை பயன்படுத்திவருகின்றனர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. சாலைகளை மட்டுமல்லாது தெருக்கள் மற்றும் வீடுகளையும் நம்மால் இந்த தொழில்நுட்பம் மூலமாக காண முடியும்.
ஆனால், சில சமயங்களில் ஆச்சர்யம் அளிக்கும் விநோதங்களின் புகலிடமாகவும் இந்த கூகுள் மேப் இருப்பதுண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மலை காடுகளுக்கு நடுவே விமானம் ஒன்று இருக்கும் கூகுள் மேப் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விமானம்
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு மழைக்காடுகளின் மரங்களுக்கு மத்தியில் ஒரு பெரிய ஜெட் விமானம் அமைந்திருப்பது போல கூகுள் மேப்பில் தெரிந்திருக்கிறது. ஆனால், விமானத்திலோ சுற்றுப்புற இடங்களிலோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. கச்சிதமாக விமானம் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது போலவே தெரிகிறது. அப்படியென்றால் இந்த விமானம் எப்படி அடர் காடுகளுக்கு இடையே வந்திருக்கும்? இதுதான் பலரது கேள்வி.
படத்தை Zoom செய்யும்போது இது ஏர்பஸ் ஏ320 அல்லது போயிங் 737 போல இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர். இதில் இன்னொரு குழப்பமும் இருக்கிறது. அதாவது வழக்கத்துக்கு மாறாக விமானம் தாழ்வாக பறக்கும்போது இந்த தோற்றம் கிடைத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதேவேளையில் அடர்காடுகளில் இப்படியான பயணம் ரொம்பவே ஆபத்தானது என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
Ghost images
இந்நிலையில், இதுபோன்ற ஜெட் விமானம் காணாமல்போனதாக எந்த வித தகவல்களும் இல்லை என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும், இது பார்ப்பதற்கு 'ghost images' போல காட்சியளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதைவிட சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால் இந்த விமானத்தின் தோற்றம் அவ்வப்போது மறைந்துவிடுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்து கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.