பொள்ளாச்சி பாலியல் வழக்கு... 4 மணி நேர விசாரணை... மிரட்டும் சி.பி.சி.ஐ.டி. ... நக்கீரன் பரபரப்பு புகார்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 02, 2019 11:39 AM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை, மிரட்டுவதுபோல் இருந்தது என்று நக்கீரன் கோபால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டது குறித்து, கோவையில் ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி வந்தனர். இதனையடுத்து, நக்கீரன்கோபால் தொடர்ந்த வழக்கில், சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்பேரில், எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திங்களன்று ஆஜரான நக்கீரன் கோபாலிடம், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை விசாரணை நடைபெற்றது. 4 மணிநேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், 'இவ்வளவு கொடூரமான பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது நக்கீரன். ஆனால், ஏன் வெளிக்கொண்டு வந்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருந்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணை' எனக் கூறியுள்ளார்.
மேலும், '1200 -க்கும் மேற்பட்ட வீடியோக்கள் எங்கே? இதை, யார் உங்களுக்கு கொடுத்தது? பெயர் மறைத்து வெளியிட்டுள்ள இளம்பெண்களின் பெயர்கள் என்ன?' என்று கேள்வி எழுப்பினார்கள். 'பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த செய்தி வெளிவரக்கூடாது என்று மிரட்டுவதுபோல் இருந்தது சி.பி.சி.ஐ.டி. விசாரணை' என நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.
'உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 4 மணி நேரத்துக்கு மேலாக என்னை துன்புறுத்துவதுபோல் கேள்வி எழுப்பினார்கள். வரும் 3-ந் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று இன்னொரு சம்மனைக் கொடுத்தார்கள்' என்று நக்கீரன் கோபால் கூறினார்.
