'எல்லாத்தவிடவும் இந்த வேதனை தான் தோனிக்கு'... 'போட்டிக்குமுன் வரை கிண்டலடித்துவிட்டு'... 'திடீர் சப்போர்ட்டுக்கு வந்த சேவாக்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக் தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்கடித்துள்ளது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்க்க, அடுத்து களமிறங்கிய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு, முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இளம் வீரர்களுக்குத் தோனி வாய்ப்பளிக்க மறுக்கிறார் எனத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில், இந்தப் போட்டியில் இளம் வீரர்களான தமிழகத்தை சேர்ந்த நாராயண் ஜெகதீஸன், ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் தோனி வாய்ப்பளித்தார். ஆனால் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி பேசியதற்கு ஏற்பவே இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். இந்தத் தோல்வியால் துவண்டுபோயுள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு சேவாக் ஆதரவு அளித்துள்ளார்.
இணையதளம் ஒன்றிற்கு சேவாக் அளித்த பேட்டியில், "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அடைந்த தோல்வி நீண்ட காலத்துக்கு அவர்களைப் பாதிக்கும். இந்தத் தோல்வி சிஎஸ்கே அணியைவிட தோனியை மனரீதியாக மிகவும் பாதித்துள்ளது. தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். மீண்டும் அவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இளம் வீரர்கள் இருவரும் சிறிதளவு ஸ்கோர் செய்திருந்தால், போட்டி சிறிது சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்திருக்கும். இளம் வீரர்கள் பொறுப்புடன் பேட் செய்திருந்தால், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 140 முதல் 150 ரன்களை எட்டியிருக்கும். தோனியும் அவர்களின் திறமையைக் கண்டு சிறிது மனநிறைவு அடைந்திருப்பார்.
ஆனால், தன்னை மிகவும் தலைக்குனிவுக்கு ஆளாக்கிய இளம் வீரர்களை நினைத்து தோனி மிகவும் வேதனைப்படுகிறார். இந்தத் தோல்வியிலிருந்து சிஎஸ்கே அணி எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். ஆனால் சிஎஸ்கே - மும்பை இடையிலான போட்டி தொடங்கும் முன் சேவாக் இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கே அணியை கிண்டல் செய்திருந்தார். அதில், "ஐபிஎல் தொடரில் இரு எதிரி அணிகள் இன்று மோதுகின்றன. சிஎஸ்கே அணி மும்பையைத் தோற்கடித்துள்ளது. ஆனால், இப்போது வரை சிஎஸ்கே அணி வெற்றி பெறும் முனைப்பு குறைந்து முதியோர் கிளப் போன்று இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.