‘இதுவே கடைசி போராட்டமா இருக்கணும்’:எழுவர் விடுதலைக்காக போராட்டத்தில் இறங்கும் இயக்குநர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 07, 2019 07:00 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏழு பேரும் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.

vetrimaran,rajumurugan,mariselvaraj supports release of 7 prisoners

இவர்களின் விடுதலையைக் குறிக்கும் புதிய பதமாக, ‘எழுவர் விடுதலை’ என்கிற சொல் உருவாகி வந்திருக்கிறது. இந்த எழுவர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தும் கூட, ஆனாலும் இன்னும் ஆளுநர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதே குற்றச் சாட்டினை ஆளுநரகமும் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை மீது முன்வைப்பதும் உண்டு. பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும், இன்ன பிற உலகத் தமிழர்களும் இந்த எழுவர் விடுதலையை வலியுறுத்திவரும் நிலையில், பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மாள் வரும் 9-ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை, சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனிதச் சங்கிலி பேரணி நடத்த வேண்டுமென பல்வேறு இயக்கங்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பல வருடங்களாக பேரறிவாளனின் விடுதலைக்காக போராடிவரும் அற்புதம் அம்மாளின் இந்த முயற்சிக்கு பொதுமக்களுடன், திரைத்துறையில் தங்களது புதிய பரிமாணத்தினாலான திரைப்படைப்புகளைத் தந்து அசைக்கமுடியாத நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கியிருக்கும் சில முக்கிய இயக்குநர்களும் எழுவர் விடுதலை தொடர்பான அற்புதம் அம்மாளின் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு தங்களது ஆதரவு நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறன் இதுகுறித்த, தனது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.  அதன்படி, 28 ஆண்டுகள் இந்த ஏழு பேரும் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்துவிட்டார்கள். அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னும் இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. தமிழக அமைச்சரவையும் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது, ஆனாலும் ஆளுநர் கையெழுத்திடுவதில் ஏன் தாமதமாகிறது என தெரியவில்லை. குறிப்பாக இந்த மனிதச்சங்கிலி போராட்டம் அவர் ஒருவரது கையெழுத்தினை வலியுறுத்தியே நடக்கவுள்ளது. இதில் நான் கலந்துகொள்ளவிருக்கிறேன். அனைவரும் கலந்துகொண்டு, யாருக்கும் நடக்கக் கூடாத இப்படியான மனித உரிமை மீறலும் துயரமும் இத்துடன் அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக போராட வேண்டும். இது நம் கடமையும் கூட. நம் போராட்டத்தின் அழுத்தம், எழுவர் விடுதலைக்காக ஆளுநரை கையெழுத்து போட வைக்க வேண்டும். எழுவர் விடுதலைக்கான இறுதிப் போராட்டமாக இது இருக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தான் சிறுவயதாக இருக்கும்போது தொடங்கிய இந்த வழக்கில் எழுவர் விடுதலைப் போராட்டத்துக்காக தன் அப்பா, அண்ணன், தற்போது தானும் பங்கேற்று விட்டதாகக் கூறியுள்ளார். 28 வருடங்களாகியும் பல வழிகளில் போராடியும் இந்த எழுவர் விடுதலைக் கோரிக்கை ஆளுநரின் ஒரே ஒரு கையெழுத்தைக் கோரி நிற்கிறது. இது தொடர்பான மனிதச் சங்கிலியில், தான் சேலத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இயன்றவர்கள் 7 இடங்களில் எங்கேயாவது கலந்துகொண்டு நீதியை நிலைநாட்ட முயல வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல் குக்கூ,ஜோக்கர், ஜிப்ஸி திரைப்படங்களின் இயக்குநர் ராஜூமுருகன் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி,  இந்திய இறையாண்மையையும் இந்திய சட்டத்தையும் காப்பாற்றுவதற்கான  இந்த போராட்டத்தில் ஆளுநரின் கையெழுத்தைக் கோருவது நம் கடமை என்றும்  செய்யாத குற்றத்துக்காக 28 வருடங்களாக சிறையில் இருக்கும் இந்த எழுவரின் வாழ்க்கையில் ஒளியேற்றும் இவர்களின் விடுதலையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. ஆனால் இதனை செயல்படுத்தாத ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும். அதற்காக இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில், தான் கலந்துகொள்ளவிருப்பதாக ராஜூ முருகன் கூறியுள்ளார்.

Tags : #ARPUTHAMAMMAL #PERARIVALAN #28YEARSENOUGHGOVERNOR #VETRIMARAN #RAJUMURUGAN #MARISELVARAJ #PROTEST