‘50 வயசாயிடுச்சு.. ஆனா’.. வித்யாசமான விருப்ப மனு கொடுத்த முதியவரால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 26, 2019 04:16 PM

நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போட, முதியவர் ஒருவர் விருப்ப மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

old man gives petition to collector regarding vote rights

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாகத் தேர்தலில் போட்டியிடுவதற்குத்தான் வேட்பாளர்கள் விருப்ப மனு அளிப்பார்கள். ஆனால் இங்கு முதியவர் ஒருவர் ஓட்டுப்போட விருப்ப மனு ஒன்றை அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், 'எனக்கு 50 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை ஒரு தடவை கூட, ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை. கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருவதால், உரிய முகவரி என்னிடம் இல்லை. இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பிலோ, வாக்காளர் பட்டியலிலோ என்னை சேர்க்கைவில்லை' என்று கூறினார்.

இதேபோல 'குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் தனக்கு தரப்படவில்லை. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்று முதியவர் முனியாண்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

'என்னுடன் பிறந்த சகோதரிகள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். பெற்றோரும் சில ஆண்டுகளுக்கு முன்னர்  இறந்துவிட்டனர். அவர்கள் இருந்த வீடும் விற்கப்பட்டுவிட்டதால் நான் தனித்து வாழ்கிறேன்' என்று முனியாண்டி தெரிவித்துள்ளார்.

'ஒருமுறை காவல் அதிகாரியின் உதவியால் முன்பு இருந்த வீட்டின் முகவரியை வைத்து ஆதார் அட்டை  பதிவு செய்ய உதவினார். இருந்தும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே கிடைத்ததே தவிர, ஆதார் அட்டை கிடைக்கவில்லை. எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டுப்போட ஆசை இருந்தும்,  இதுவரை ஒருமுறை கூட ஓட்டுப் போட்டதில்லை. தேர்தலில் ஓட்டுப்போட்டு எனது கடமையை நிறைவேற்ற, தக்க ஆவணங்கள் வழங்கிட அதிகாரிகள் உதவவேண்டும்' என்று முதியவர் முனியாண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : ##LOKSABHAELECTION2019 ##PUDUKKOTTAI