'இப்போ என்ன செய்ய போறீங்க'...'ட்விட்டர் சி.இ.ஓ'கே இந்த நிலைமையா'... அதிர்ந்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Aug 31, 2019 01:20 PM
அரசியல், சினிமா, மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பலரும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க அதிகம் பயன்படுத்துவது ட்விட்டரை தான். பலருக்கும் முக்கிய தகவல் பரிமாற்ற தளமாக பயன்படும் ட்விட்டரில், அவ்வப்போது சில பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படும்.
இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கை மர்மநபர்கள் நேற்று மதியம் ஹேக் செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கில் இருந்து இனத்தூண்டல் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டன. 10 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த ட்வீட்கள் பின்னர் தானாகவே அழிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த ட்விட்டர், ஜாக்கின் கணக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது எனவும் ட்விட்டரின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே க்ளவ்ட்ஹோப்பர் வழியாக ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. முதலில் ஜாக் டோர்சேவின் செல்போன் எண்ணை கண்டறிந்த ஹேக்கர்கள், அதனை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னர் எஸ்.எம்.எஸ் வாயிலாக ட்வீட் பதிவாகும்படி ஹேக் செய்துள்ளனர். இந்த சம்பவம் பல நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பலரும் ட்விட்டரின் பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் தொடர்ந்து கண்காணிப்பதோடு, சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.