'அவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு விளைவு மோசமா இருக்கும்'... 'ஒரு ரஷ்யருக்காக கொந்தளித்துள்ள அமெரிக்கா'... யார் இந்த அலெக்ஸி!
முகப்பு > செய்திகள் > உலகம்அலெக்ஸி நவல்னிக்கு மட்டும் ஏதாவது நடந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
யார் இந்த அலெக்ஸி நவல்னி, அவருக்காக ஏன் அமெரிக்கா கொந்தளிக்க வேண்டும் எனப் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி, கடந்த 2014ம் ஆண்டு தொடரப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜனாதிபதி புதினை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவல்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 3 வாரங்களாகச் சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சுமார் 17 கிலோ வரையில் உடல் எடை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நவல்னி எந்த நேரத்திலும் மரணமடையக்கூடும் என்று அவரது மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் அலெக்ஸியின் உடல்நிலையைச் சுட்டிக் காட்டியுள்ள அமெரிக்கா, அவரது உயிருக்கு மட்டும் ஏதாவது ஏற்பட்டால் ரஷ்யா அதற்கான விலையை அளிக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையாள வேறு பாதுகாப்பான வழிமுறைகள் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே நவல்னியின் உடல்நலம் குன்றி வருவதால், 44 வயதான அவருக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என மருத்துவர்கள் குழு முன்னர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.