கொரோனாவுக்கு 'தடுப்பூசி' கண்டுபுடிச்ச ரஷ்யா ... 'எப்போ' மக்களுக்கு கெடைக்கும்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக 2 நாட்களுக்கு முன் ரஷ்யா அறிவித்தது. அதோடு ஜூன் 18-ம் தேதி மனிதர்கள் மீது நடத்திய முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தது. தொடர்ந்து 2-ம் கட்ட சோதனை வருகின்ற 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மனிதர்கள் மீது நடத்தப்பட இருக்கிறது. அந்நாட்டை சேர்ந்த கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த தடுப்பூசியை கண்டறிந்து உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், ''தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. 28-ந் தேதிக்குள் அதை முடித்து விடுவோம். அதன்பிறகு, எங்கள் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தாக்கல் செய்வோம். இதற்கு தேவையான ஆவணங்களை ஏற்கனவே சேகரிக்க தொடங்கி விட்டோம்.
ஆகஸ்டு மாத மத்தியிலேயே சிறிதளவு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில், இந்த தடுப்பூசியை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய தொடங்கும். சுகாதார மையங்களில் ரஷிய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று நம்புகிறோம். அடுத்த சில மாதங்களுக்கு மருந்தகங்களில் இது கிடைக்காது,'' என தெரிவித்து இருக்கிறார். அதே நேரம் மனிதர்கள் மீது 4 கட்டமாக சோதனைகள் நடத்திய பின்னரே தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது? என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் சாத்தியமான 21 தடுப்பூசிகளை பட்டியலிட்டு இருக்கிறது. இதில் 2 தடுப்பூசிகள் மட்டுமே மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.