'பிரச்சனை செய்து உடலை வாங்கிய சொந்தங்கள்'... 'மயானம் வரை ஊர்வலம்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதிபால்ராஜ். இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள் முதியவரின் உடலைக் கேட்டு பிரச்சனை செய்துள்ளனர். இதனால் மருத்துவமனை நிர்வாகமும் முதியவரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி மையவாடியில் எரியூட்டப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த சூழ்நிலையில் உயிரிழந்து எரியூட்டப்பட்ட முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் மையவாடியில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதனால் மயானத்துக்கு உடலை ஊர்வலமாகக் கொண்டு சென்ற உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக உயிரிழந்த முதியவருக்குத் தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
