'சொத்து, பதவி வேண்டாம்'...'அரச குடும்பத்திலிருந்து விலக காரணம் என்ன?... மவுனம் கலைத்த ஹாரி!
முகப்பு > செய்திகள் > உலகம்அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து ஹாரி பேசியுள்ளார்.
அரச பதவிகளோ, அதன் சொத்துகளோ எதுவும் வேண்டாம் என உதறித் தள்ளி, பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேற இளவரசர் ஹாரி எடுத்த முடிவு, உலகளவில் விவாதத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. மிகவும் கவுரவமிக்க பதவியை கைவிட ஏன் ஹாரி-மேகன் தம்பதி முடிவு செய்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக பலரது மனதிலும் இருந்தது. இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்த போதும், அது தோல்வியில் முடிந்தது.
இதனிடையே ஹாரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று நேற்று இரவு நடந்த சென்டபேல் நிகழ்ச்சியில் விருந்தினர்களிடம் ஹரி கூறியுள்ளார். அதில் '' மேகனும், நானும் திருமணமானவுடன் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தோம். சேவை செய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என எண்ணி, இருவரும் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் அந்த காரணங்களினாலே இந்த முடிவு எடுக்கப்பட்டது தான் மிகவும் வருத்தமான ஒன்று.
எனது மனைவியும், நானும் அரச குடும்பத்தில் இருந்து விலகுவதற்கான முடிவு என்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல மாதங்கள் யோசித்து எடுக்கபட்ட முடிவு. ராணி, காமன்வெல்த் மற்றும் எனது ராணுவ சங்கங்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே எங்கள் நம்பிக்கை. ஆனால் பொது நிதி இல்லாமல் அது நிச்சயம் சாத்தியமில்லை.
எனது முடிவு எனது வாழ்க்கையை நிச்சயம் அமைதியாக்கும் என ஆழமாக நம்புகிறேன். இந்த முடிவை நான் மனதார ஏற்று கொள்கிறேன். இது ஹாரி யார் என்பதை எனக்கு காட்டியிருக்கிறது. ராணியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என் பாட்டி, எனது தளபதி. இந்த கடினமான முடிவை எடுத்த நிலையிலும், கடந்த சில மாதங்களாக மேகனுக்கும் எனக்கும் அவர்கள் காட்டிய ஆதரவுக்கு அவருக்கும் எனது குடும்பத்தினருக்கும் நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்'' எனநெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.