"கட்டிடம் இடிஞ்சு விழப்போகுது.. தப்பிச்சிடுங்க".. அதிகாலையில் கடவுள் மாதிரி வந்து அலெர்ட் கொடுத்த நபர்.. கொஞ்ச நேரத்துல நடந்த பயங்கரம்..
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டில் கட்டிடம் இடிந்து விழப்போவதாக குடியிருப்பாளர்களை ஒருவர் எச்சரிக்க, உடனடியாக மக்கள் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் கட்டிடம் சரிந்து விழுந்திருக்கிறது. இந்த சம்பவம் பிரான்ஸ் மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Also Read | குளுகுளு வெண்பனிபோல.. சீஸனின் முதல் பனிப்பொழிவு.. குளிர்ந்துபோன மக்கள்.. வைரல் வீடியோ.!
வடக்கு பிரான்சில் இருக்கிறது லில்லி நகரம். இங்கே உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இதற்கு காரணம் சரியான நேரத்தில் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த நபர் தான் எனவும் அவர்கள் பாராட்டியுள்ளனர். இருப்பினும் அவரது பெயரை கூற அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இடிபாடுகளில் இருந்து ஒருவரை லேசான காயங்களுடன் மீட்டதாக லில்லி தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர். சனிக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், அதன்பின்னர் கட்டிடம் இடிந்து விழுந்தது எப்படி என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டிடத்தில் வசித்துவந்த ஒருவர் சனிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது, சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அக்கம் பக்கத்தினரை அலெர்ட் செய்து உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறுமாறு சொல்லியிருக்கிறார். மேலும், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கும் இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கிறார். இதனால் அதிகாரிகளின் துணையுடன் மக்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற கொஞ்ச நேரத்தில் அந்த கட்டிடம் சரிந்து விழுந்திருக்கிறது.
லில்லி நகரின் மேயர், மார்ட்டின் ஆப்ரி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில்,"எனது உடல் இன்னும் நடுங்குகிறது. ஏனென்றால் அந்த மனிதர் அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு திரும்பி, எங்களைத் தொடர்பு கொள்ளாவிட்டால், எங்களால் இத்தனை துரிதமாக செயல்பட்டிருக்க முடியாது. மேலும், அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும். அவர் நகராட்சி காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களை எச்சரித்தார். அவர்கள் கட்டிடத்தை காலி செய்ய முடிவு செய்தனர்" என்றார்.
இந்நிலையில், தக்க சமயத்தில் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களை அலெர்ட் செய்த அந்நபருக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Also Read | முகமது ஷமியின் 'கர்மா' கமெண்ட்.. அக்தர் போட்ட ரிப்ளை.. ட்விட்டரில் வலுக்கும் விவாதம்..!
