103 மீட்டர் இரட்டை கட்டிடம்.. 9 நொடியில் இடிக்க பரபரப்பு உத்தரவு.. 5 பேர் நடத்த போகும் "ஆபரேஷன் மெகா பிளாஸ்ட்"...!
முகப்பு > செய்திகள் > உலகம்நொய்டாவின் 93ஏ செக்டாரில் அமைந்து உள்ள சூப்பர் டெக் இரட்டை கட்டிடங்களை 9 நொடிகளில் தகர்க்க இருப்பதாக நொய்டா கட்டிட ஆராய்ச்சி ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
103 மீட்டர் கட்டிடம்
நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்காக ரூர்கியில் உள்ள நொய்டா ஆணையம் மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் Edifice Engineering என்னும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள Jet Demolition நிறுவனத்துடன் இந்த கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட இருக்கிறது Edifice Engineering.
திட்டம்
இந்த சூப்பர் டெக் கட்டிடத்தில் ஒன்று 103 மீட்டர் உயரத்துடனும் மற்றொன்று 97 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி. வரும் மே மாதம் 22 ஆம் தேதி இந்த பிரம்மாண்ட கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. இதற்காக 2500 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 வினாடி
இதுகுறித்துப் பேசிய Edifice Engineering நிறுவனத்தின் பங்குதாரர் உத்கார்ஷ் மேத்தா," இந்த வெடிப்பு சுமார் 9 வினாடிகளில் நடைபெறும். இரு கட்டிடங்களும் ஒரே சமயத்தில் கீழே விழும். வெடிப்பின் போது துகள்கள் சிதறாமல் இருக்க கட்டிடத்தை சுற்றி கம்பி வலை மற்றும் ஜியோடெக்ஸ்டைல் துணிகொண்டு மூடப்படும்" என்றார்.
இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் வெடிப்பு சோதனையின் அடிப்படையில் 2500 - 4000 கிலோகிராம் வரையில் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாக மேத்தா தெரிவித்தார். இந்த வெடிபொருட்கள் சுமார்100 கிலோமீட்டர் தொலைவில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மேத்தா, வெடிப்பு சோதனைக்கு பிறகு கட்டிடத்தில் துளையிட்டு அதன்மூலம் வெடிமருந்துகள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு
இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள எமரால்ட் நீதிமன்றத்தின் இரண்டு டவர்கள் மற்றும் ஏடிஎஸ் வில்லேஜ்-ன் இரண்டு டவர்களை பாதுகாக்க இரும்பு சட்டங்கள் மற்றும் ஜியோடெக்ஸ்டைல் துணி ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.
5 பேர்
கட்டிடம் தகர்க்கப்படும் நாளன்று வெடிப்பிற்கு 5 மணி நேரத்திற்கு முன்பாகவே அருகில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி மருந்தை இயக்குபவர், காவல்துறை அதிகாரி மற்றும் திட்ட இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே வெடிப்பின் போது அந்தப் பகுதியின் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெடிப்பிற்கு பிறகு கீழே விழும் கற்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள பைப்களை பாதிக்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேத்தா தெரிவித்தார். இதற்கான செலவுகள் அனைத்தையும் சூப்பர் டெக் நிறுவனமே ஏற்க இருக்கிறது. கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டவுடன் அந்த இடம் உரிமையாளரிடம் வழங்கப்படும் என நொய்டா ஆணையம் மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.