‘விஷம்’ குடித்து உயிருக்கு போராடிய பெண்.. மருத்துவமனைக்கு ‘தோளில்’ சுமந்து ஓடிய உறவினர்.. தருமபுரி அருகே நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி அருகே விஷம் குடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய திமுக எம்எல்ஏவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டுவன அள்ளி, ஏரிமலை, கோட்டூர்மலை, அலக்கட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்காக திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்றுள்ளார். அப்போது ஏரிமலை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அப்பெண்ணின் உறவினர் ஒருவர் அவரை தோளில் சுமந்தபடி சுமார் 3 கிலோமீட்டர் ஓடியே வந்துள்ளார். இதைப் பார்த்த திமுக எம்எல்ஏ இன்பசேகரன் உடனே தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த எம்எல்ஏ இன்பசேகரன், வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களான கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சுமார் 500-க்கும் அதிகமான குடும்பங்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை 8 கிலோமீட்டர் தோள்களில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும், அதனால் உடனடியாக அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
