‘கையெழுத்தான திமுக - மதிமுக கூட்டணி: இடைத் தேர்தலிலும் திமுகவுக்கே ஆதரவு’.. வைகோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 05, 2019 02:18 PM
வைகோவின் மதிமுக மற்றும் ஸ்டாலினின் திமுகவுக்கிடையேயான 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.

முன்னதாக அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அதன் பின்னர் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
அங்கு நிகழ்ந்த சந்திப்பின்படி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிகள் என 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததை அடுத்து கூட்டணி உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து நடக்கவுள்ள 21 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு மதிமுக முழு ஆதரவு அளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார். 23 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைக்குச் செல்கிறார் என்பதும் முன்னதாக 1978 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராக வைகோ பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், மதிமுகவுக்கு 2 தொகுதிகளும் (1 மக்களவை, 1 மாநிலங்களவை), விசிகவுக்கு 2 தொகுதிகளும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதியும், ஐஜேகேவுக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என்பதெல்லாம் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
