'என் மனசு உடைஞ்சு போச்சு'... 'எதற்கு இவ்வளவு வன்மம்'... 'நான் என்ன தப்பு செஞ்சேன்'... தமிழ்நாடு வெதர் மேனின் உருக்கமான பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு வெதர் மேனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு வெதர் மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் மக்கள் வானிலை ஆய்வாளர் என அனைவராலும் அழைக்கப்படுபவர். வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு என்பது தான் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்றாலும், பிரதீப் ஜானின் வானிலை அறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இருக்கும். இதனால் மழையோ, புயலோ வந்தால் உடனே பலரும் இணையத்தில் தேடுவது, தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் என்ன பதிவைப் போட்டுள்ளார் என்பது குறித்துத் தான்.
கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளம் முதல் சமீபத்தில் வந்த நிவர் புயல் வரை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பிரதீப் ஜான் தெரிவித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிரதீப் ஜான் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதீப் ஜான் நடந்த சம்பவங்கள் குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், ''என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். அந்த கருத்துக்கள் மிகவும் வன்மம் நிறைந்து காணப்படுகிறது. சிலர் என்னைச் சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள், சிலர் நான் கொல்லப் படவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்கள். நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல. நான் மனிதர்களை மனிதர்களாகவே பார்க்கிறேன். அவர்களை மதத்தை வைத்து ஒருபோதும் நான் வேறுபடுத்திப் பார்த்தது இல்லை.
என் மீது பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக நான் சர்ச்சிற்கு பணம் கேட்கிறேன் என்று. ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை. மாறாக சர்ச்க்கு பணம் கொடுப்பதைவிடவும், இந்த கொரோனா நேரத்தில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவுங்கள் எனக் கிறிஸ்தவர்களிடம் கூறினேன்'' இவ்வாறாக பிரதீப் ஜான் குறித்துப் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
இறுதியாக மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ள அவர், ''என்னுடைய போஸ்ட்களை பாருங்கள் என யாரையும் நான் கட்டாயப்படுத்துவது இல்லை. நான் ஒரு சாதாரண மனிதன். என்னுடைய வேலை நேரம் தவிர்த்து நான் இந்த பணியைச் செய்து வருகிறேன். இது என்னுடைய ஆர்வம். ஆனால் என் மீது நடத்தப்படும் தனிமனித தாக்குதல்களைப் பார்க்கும் போது எனது மனம் உடைந்து போனது'' எனப் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், தன்னை குறித்து அவதூறு பரப்பியவர்களின் முகநூல் பதிவையும் அதனுடன் இணைத்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜானுக்கு பலரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். மக்களுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைக் கொண்டு சேர்க்கிறீர்கள், எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும், எனப் பலரும் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.