"அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை".. 'தமிழ்நாடு சர்ச்சை'.. ஆளுநர் பரபரப்பு விளக்க அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் சம கால அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'தமிழ்நாடு' பற்றிய விவாதங்களே இன்னும் முடியாத நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்க அதுபற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read | செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!
அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதை தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஆளுநர் வெளிநடப்பு செய்தது அரசியல் தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில்,"2023, ஜனவரி 4-ம் தேதி ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழைமையான கலாசார தொடர்பைக் கொண்டாடும், ஒரு மாத காசி - தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வத் தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி, தமிழ்நாட்டுக்குமிடையே இருக்கும் தொடர்பைக் குறிக்க `தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் `தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் `தமிழகம்’ என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்"
"எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரைபோல பொருள்கொள்வதோ, அனுமானம் செய்துகொள்வதோ தவறானது, யதார்த்தத்துக்குப் புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், `ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'தமிழ்நாடு' விவகாரம் பற்றிய விவாதங்களுக்கு இடையே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
