'பின்பற்றுவது மார்க்ஸ் கொள்கைனா, பாஜகவோட கூட்டணி ஏன்?’.. பாமகவுக்கு கேள்வி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 07, 2019 11:38 AM

மார்க்ஸின் 201-வது பிறந்த தினத்தையொட்டி அதனை வணிகர் தினமாகக் கொண்டாடியதோடு, மார்க்ஸின் புரட்சிகர சிந்தனைகள் பற்றி பலரும் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

TN CPM Head Criticizes PMKs Tweet Ober Karl Marx & PMK replies

அதே நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்ஸின் ‘உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலம்’ என்கிற புகழ்பெற்ற பொன்மொழியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,  ‘பாட்டாளி மக்கள் கட்சியின் முப்பெரும் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் லட்சியங்களை வென்றெடுக்க உறுதி ஏற்போம்’ என்றும் கூறியிருந்தார்.

மார்க்ஸிய வட்டத்தில் பெரும் விவாதத்துக்குள்ளான இந்த ட்வீட் பற்றி சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விகடனுக்கு அளித்த பேட்டியில்,  பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மார்க்ஸை தங்கள் கட்சிக் கொள்கைகளின் வழிகாட்டிகளாகக் கூறுவது முரண்பாடாக உள்ளதாக கூறியுள்ளார்.  

பாட்டாளி வர்க்கத்தை அவர்கள், பேதங்களற்றுப் பார்க்காமல் சாதிப்பிரிவினை அரசியல் செய்வதாகவும், ஆனால் மார்க்ஸோ சுரண்டல், ஏகாதிபத்தியம், அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானவர் என்றும் அப்பேற்பட்ட மார்க்ஸை பின்பற்றும் கட்சியாக பாமக பாஜகவுடனான கூட்டணியில் எதன் அடிப்படையில் இருக்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இடதுசாரி சிந்தனைகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதாகவு, அவர்களின் ஆதரவைத் தக்க வைக்கும் பொருட்டு பாமக மார்க்ஸை முன்னிறுத்துவதாகவும் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த பாமக தரப்பு வழக்கறிஞரும் பேச்சாளருமான பாலு, விகடனிக்கு அளித்த பதிலில், பாமகவின் உறுப்பினர் அட்டையில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின் புகைப்படங்கள் இருப்பதாகவும், தங்கள் மீது சாதி முத்திரை குத்தப்படுவதாகவும், ராமதாஸூம் அன்புமணியும் மார்க்ஸியவாதிகள்தான் என்றும் கூறியுள்ளார்.  அதோடு, மார்க்ஸின் பொதுவுடமை சித்தாந்தத்தை பரப்பி, சமூக ஏற்றத்தாழ்வை சரிசெய்ய நினைக்கும் ஒருவர் இணையவேண்டிய இடம் பாமக என்றும், தங்களுக்கு உண்டாகும் வீழ்ச்சி தமிழக மக்களின் வீழ்ச்சி என்றும் பேசியுள்ளார்.

Tags : #PMK #RAMADOSS #CPM #KARLMARX