'தொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்'... 'நானும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'... முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷில்டு’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்குப் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி போடப்படும். முதல் டோஸ் போடப்பட்டு பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். அதற்குப்பிறகு அவர்கள் பாதுகாப்பாக இருப்பர்.
இது உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சனை. நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான், இதை இந்தியா சம்மந்தப்பட்ட பிரச்சனையாக பார்க்கவேண்டும். முன்கள பணியாளர்களுக்குப் பிறகு, நான், நீங்கள் மற்றும் என் குடும்பம் மற்றும் உங்கள் குடும்பமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். நம் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்கள் இந்த கொரோனா தடுப்பூசியைப் போட்டு கொள்கிறார்கள். நானும் நிச்சயமாகப் போட்டுக்கொள்வேன்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.