ஜனவரி 24-ல் சனிப் பெயர்ச்சியா?... குழம்பிய பக்தர்கள்... திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 22, 2020 07:10 PM

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 24-ம் தேதி சனிப் பெயர்ச்சி  விழா நிகழுமா என்பது குறித்து திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

Thirunallar Temple Devasthanam Clarifies on Sani peyarchi

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா என்பது வெகுவிமரிசையாக நடைபெறும். அப்போது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து,  நளன் குளத்தில் நீராடி, சனிபகவானை தரிசனம் செய்வார்கள்.

இதனால் தங்களது வாழ்வில் சனிப் பகவானின் பிடியில் இருந்து தப்பித்து நல்லத நடைபெறும் என்று மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்நிலையில், வரும் ஜனவரி 24-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைப்பெறவுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் இந்த முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, வரும் டிசம்பர் 27-ம் தேதி தான் சனிப்பெயர்ச்சி நிகழும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு நிகழவுள்ள சனிப்பெயர்ச்சி தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவிய தகவல், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் டிசம்பர் 27-ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தான் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் ஜனவரி 24-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் போது, சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் போதுதான் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

Tags : #SANIPEYARCHI #SATURN #THIRUNALLAR #DEVOTEES