கடைசி பந்துக்கு '5 ரன்' தேவை...! 'சிக்ஸ்' அடித்து மேட்ச்சை முடித்த வீரர்...! - சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு கிரிக்கெட் அணி நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று கோப்பையை வென்றுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக கிரிக்கெட் அணிகள் ஒன்றோடு ஒன்று மோதின.
முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது.
152 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தமிழ்நாடு அணி முதலில் சில அவுட்களை கொடுத்தது. தொடக்க வீரர்களான ஹரி நிஷாந்த் மற்றும் நாராயண் ஜகதீசன் களமிறங்கிய நிலையில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஹரி நிஷாந்த் அவுட்டானார். தொடர்ந்து வந்த சாய் சுதர்ஷன், 9 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதன்பின் வந்த கேப்டன் விஜய் ஷங்கர் 18 ரன்களிலும், நாராயண் ஜெகதீசன் 41 ரன்களிலும் ஆட்டத்தின் 16-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி ஜெயிக்குமா என்ற சந்தேகமே ஏற்பட்டது.
இந்நிலையில், 17-ஓவரில் அதிரடியாக களமிறங்கிய ஷாருக்கான் மற்றும் சஞ்சய் யாதவ் கூட்டணி அடித்து ஆட தொடங்கியது. இந்த ஜோடிகள் ஒரு ஓவரில் 19 ரன்களை குவித்தனர். கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தமிழ்நாடு அணி சென்றது.
அதோடு துரதிஷ்டவசமாக 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டையும் இழந்தது தமிழ்நாட்டு அணி. கடைசி பந்தில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட சிக்ஸர் விளாசி கோப்பையை வென்றுக் கொடுத்தார் ஷாருக்கான்.
இந்நிலையில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதேபோல் கடந்த இரு வருடங்களில் நடந்த சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையோடு சேர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது தமிழ்நாடு அணி.
மேலும், தமிழ்நாடு அணி அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.