ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை.. உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 26, 2019 03:41 PM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

supreme court stays proceedings of Jaya death probe

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஆணையம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அப்போல்லோ மருத்துவமனை மருத்துவர்களின் சாட்சியம் தவறாகப் பதிவுசெய்யப்படுவதாக, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி வழக்கு ஒன்றை அப்போல்லோ நிர்வாகம் தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை எனக் கூறியது. இதனை எதிர்த்து, அப்பல்லோ நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் விசாரணைக்கு வந்த அந்த மனுவில், 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக போதிய தகவல்களை அளித்தும் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள்.

ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர்களை விசாரிக்க உகந்த ஆணையம் அல்ல. 21 பேர் கொண்ட மருத்துவக்குழுவை அமைத்தபிற்கே விசாரணை நடத்த மேண்டும். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் இந்த வழக்குத் தொடுக்கப்படவில்லை' என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி, அப்போல்லோ மருத்துவமனையின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Tags : #ARUMUGASAMY #SC