'சார், அது ஒண்ணும் இல்ல வெறும் கல்லு தான்'... 'பார்சலை பிரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'மதிப்பு மட்டும் 2 கோடி'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 'அம்பர்கிரிஸ்யை' கடத்திய கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் பகுதியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்திய போலீசார் அதனைச் சோதனை செய்ய முயன்றனர். அப்போது காருக்குள் ஒன்றும் இல்லை என காரில் இருந்தவர்கள் கூறிய நிலையில், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கிலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரிஸ் கடத்திச்சென்றது தெரியவந்தது. 'அம்பர்கிரிஸ்' சர்வதேச அளவிலான உயர்ரக வாசனைத் திரவியம் தயாரிக்கும் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு சர்வதேச அளவில் 2 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அம்பர்கிரிஸ் 2 கிலோ அளவில் இருந்தது.
பொதுவாக வெளிநாடுகளில் அதிகமாக அம்பர்கிரிஸ் கடற்கரையில் கரை ஒதுக்குவதும் அதனை அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் எடுத்து விற்பனை செய்வதையும் அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். அதன் மதிப்பும் பல கோடி ரூபாய் இருக்கும். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற கடத்தல் நிகழ்வுகள் சற்று அபூர்வமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தற்போது 2 கோடி மதிப்பில் அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடத்தலில் தொடர்புடைய ராம்குமார், முகமது அஸ்லம், ஜான் பிரிட்டோ உள்பட 6 பேரைக் கைது செய்தனர். இவர்கள் தஞ்சாவூரிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் நிலையில் அவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
