1.76 லட்சம் கோடி ரொக்கம்.. உலக வங்கியில் 4 லட்சம் கோடி கடன்.. அதிரவைத்த வேட்பாளர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 04, 2019 04:31 PM
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தன்னிடம் ஒரு லட்சத்து 76,000 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜ் ஜெபமணி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், கையில் ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் இருப்பதாகவும், உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, மோகன்ராஜ் கூறியதாவது ' '2ஜி' ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததை குறிப்பிடும் வகையில், என்னிடம், 1.76 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளேன். தமிழகத்தின் கடன், 4 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதனை சுட்டிக்காட்டும் வகையிலேயே உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளேன்'.
'ஏற்கனவே, 2009 மக்களவைத் தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டபோதும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட போதும், இதே போன்ற விபரங்களை தெரிவித்திருந்தேன்' என்று தெரிவித்துள்ளார்.
'வேட்பு மனுவில், தவறான தகவல் குறிப்பிட்டது குறித்து, யாரும் எதுவும் கேட்டதில்லை. பென்சனை சேர்த்து வங்கியில் 24,000 ரூபாய் மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையம் எப்படிச் செயல்படுகிறது என்பதை தெரிவிக்கத்தான், வேட்புமனுவில் வேண்டுமென்றே தவறான தகவல்களைக் குறிப்பிட்டேன்.' என்று ஜெபமணி அதிரவைத்தார்.
இவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் ஜெபமணி கொடுத்த தகவல் அடிப்படையில் பார்த்தால், அவர்தான் இந்தியாவிலேயே கோடீஸ்வர வேட்பாளரும் அதிக கடனாளி வேட்பாளராகவும் கருதப்படுகிறார்.