'கூடு விட்டு கூடு பாயும் அமானுஷ்ய பூஜை...' 'வெளியே நடமாடினால் காவுதான்...' 'திகிலில்' உறைந்து போயிருக்கும் 'கிராமம்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 13, 2020 11:12 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் நள்ளிரவு நேரத்தில் நடத்தப்படும் கொலு என்ற அமானுஷ்ய பூஜையால் தங்கள் உயிர் போய்விடுமோ என்ற பயத்தில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

Paranormal pooja held at midnight-Frozen people

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாதலங்களான ஏலகிரி, ஜவ்வாது மலைகள் உள்ளன. மலையடிவாரத்தில் மேற்கத்தியனூர், பொம்மிகுப்பம், கொடுமாம்பள்ளி என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில்  ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலை கிராமங்களில் கூடுவிட்டு கூடு பாய்ந்து உயிர் பிடிக்கும் ‘கொலு’ எனப்படும் அமானுஷ்ய பூஜை காலம் காலமாக அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதித்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளியை, இந்த கொலு பூஜை மூலம் உடல் நலம் பெற வைப்பதாக நம்பப்படுகிறது. நள்ளிரவில் நடத்தப்படும் பூஜையில் மாந்திரீகர் கொண்டுவரும் ஒரு பொம்மைக்குள் நோயாளியின் உயிர் இறக்கப்படுமாம்.

அதன்பின்னர் வெளியே நடமாடுபவர்களில் யாரேனும் ஒருவரது உயிரை அமானுஷ்ய சக்தி மூலம் பிடித்து வரச்செய்து படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளியின் உடலில் செலுத்துவார்களாம். அதன்பின்னர் பொம்மைக்குள் இருக்கும் அந்த நோயாளியின் உயிரை வெளியே நடமாடியவருக்கு திருப்பி அனுப்பி விடுவார்களாம். இதன்மூலம் நோயாளி உயிர் பிழைத்துவிடுவார், ஆனால் வெளியே நடமாடிய அந்த அப்பாவி, திடீரென எக்காரணமும் இல்லாமல் சில மணி நேரங்களில் தானாக இறந்துவிடுவாராம். இதைத்தான் ‘கொலு’ பூஜை என மலையடிவார மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த அருகே உள்ள மேற்கத்தியனூர் கிராமத்தில் இந்த”கொலு” பூஜை நடத்தப்போவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், அமானுஷ்ய பூஜையில் தங்கள் குடும்பம் பலியாகிவிடக்கூடாது என அஞ்சி வீடு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலை தோரணை கட்டி, வீட்டு வெளியே சாம்பலை தூவி கோடுகள் வரைந்து தூங்காமல் விழித்திருந்தனர்.

இதுபோன்ற அமானுஷ்ய பூஜை செய்யும் மாந்திரீகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.