'எஞ்சாய் எஞ்சாமி' புகழ் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கபடுவது ஏன்?.. திட்டமிட்ட சதியா?.. அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எஞ்சாய் எஞ்சாமி பாடலை இயற்றிய பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் பட்டி தொட்டி முதல் வெளிநாட்டுப் பெரு நகரங்கள் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல், 'எஞ்சாய் எஞ்சாமி'. இதன் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு ஆவார். அவரோடு இந்த பாடலில் இடம்பெற்றவர், திரைப்பட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள், தீ.
இந்நிலையில், சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மற்றும் 'நீயே ஒளி' பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை தீ-க்கு இணையாக பாடி புகழ்பெற்ற பாடகர், தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெற வில்லை. அவரது புகைப்படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், தீ-யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கப்படுவதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், இயக்குனர் பா.ரஞ்சித்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு மற்றும் மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி ஆகியோரும் தெருக்குரல் அறிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், பா. ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவு தற்போது திரைத்துறை மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.