"மாப்பிள்ளை'ன்னு கூட பாக்கலயே".. நண்பர்கள் வெச்ச திருமண பேனர்.. "எது, பலகார திருட்டு'ல மாட்டிக்கிட்டாய்ங்களா??"
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகும் விஷயம் என்றால், அது திருமணத்தை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான்.

திருமணம் என்பது, மணமக்கள் இருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இதனால், அப்படிப்பட்ட ஒரு முக்கியமான தினத்தை இன்னும் நினைவு மிக்க ஒரு தருணமாக மாற்ற பல்வேறு அசத்தலான ஆலோசனைகளையும் புகுத்தி, வித விதமான புதுமைகளையும் உண்டு பண்ணி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, திருமணத்திற்கான அழைப்பிதழ் மற்றும் போட்டோஷூட் உள்ளிட்ட விஷயங்களுக்காக பார்த்து பார்த்து ஐடியாக்களை யோசித்து வருகின்றனர்.
வெறுமென நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை தாண்டி, அதில் என்ன க்ரியேட்டிவிட்டி செய்ய முடியும் என்பது தான் மணமக்களின் யோசனையாக உள்ளது. அதே போல, சமீப காலத்தில் நிறைய திருமண அழைப்பிதழ்கள் மற்றும் திருமணம் பேனர்கள் கூட பெரிய அளவில் வைரலாகி இருந்தது. மாத்திரை டப்பாவில் திருமண அழைப்பிதழ், மீம்ஸ் கன்டென்ட்டுகளுடன் திருமண அழைப்பிதழ், நண்பர்கள் சேர்ந்து மாப்பிள்ளைக்கு வைத்த திருமண பேனர் என ஏகப்பட்ட விஷயங்கள், சமீப காலத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
அந்த வகையில், தற்போது தனது நண்பனின் திருமணத்திற்காக இளைஞர்கள் சேர்ந்து வைத்துள்ள செய்தித் தாள் வடிவிலான பேனர் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
கொடைக்கானல் மன்னவனூர் கிராமாத்தை சேர்ந்த மயில்சாமி என்ற வாலிபருக்கும், தேன்மொழி என்ற பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிகழ்ந்தது. இந்த திருமண நாளுக்காக மயில்சாமியின் நண்பர்கள் இணைந்து அட்டகாசமான, அதே வேளையில் மிகவும் புதுமையான பேனரை வைத்துள்ளனர்.
செய்தித்தாள் வடிவில், தலைப்புச் செய்தி இருக்கும் பேனர் இடம்பெற்றுள்ளது. "கலகலப்பு செய்திகள்" என்ற தலைப்புடன் "தேன்மொழி மனதை திருடிய மயில்சாமிக்கு ஆயுள் தண்டனை" என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இதன் கீழே திருமணம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட பல விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர், உலக செய்திகள் என்ற தலைப்பின் கீழ், சில நண்பர்களின் புகைப்படங்களுடன் உள்ள விவரங்கள் தான், இந்த பேனரின் சிறப்பம்சம். 'கல்யாண பந்தியில் கலவரம்', 'பலகார திருட்டில் மாட்டிக் கொண்ட பரிதாபம்', 'முந்திரி பருப்பு திருடிய குற்றவாளிகள்' என செய்தித் தாள் வடிவில் சில நண்பர்களின் புகைப்படங்களுடன் வேடிக்கையான தகவல்கள் திருமண பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, கல்யாணமாலை என்ற பெயரில் சிலருக்கு கல்யாணம் ஆகாத தகவல் இருப்பதும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீப காலமாகவே புதுமையுடன் கூடிய திருமண பேனர்கள், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், அதில் முக்கியமான இடத்தையும் இந்த பேனர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
