VIDEO: 'ஊரடங்கால வேல போச்சு... கந்துவட்டி கொடுமை'... மகனின் டாக்டர் கனவுக்காக... ஏழைத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 28, 2020 04:08 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க பைனான்சியர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர், கந்துவட்டிக் கொடுமையால் விஷம் குடித்து உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

namakkal man struggling of usury interest attempt suicide

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள நெ.3 குமாரபாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலைமணி. இவருக்கு கவியரசு என்ற மகனும், திரிஷ்யா என்ற மகளும் உள்ளனர்.

ஏழை கூலித்தொழிலாளியான கலைமணிக்கு தனது மகனை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அந்த வகையில், மகன் கவியரசுவுக்கு சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்ததாக கூறப்படுகின்றது.

வழக்கமாக ஆண்டுக்கு மருத்துவ கல்விகட்டணமாக 5 1/2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், இவர் ஆதிதிராவிடர் இடஒதுகீக்கீட்டில் தனது மகனை சேர்த்ததால் ஆண்டுக்கு 2 1/2 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டியது இருந்துள்ளது.

படிப்பிற்கு வங்கியில் கல்வி கடன் பெறலாம் என்ற யோசனை இல்லாமல் மருத்துவ கல்லூரி சீட் கிடைத்த மகிழ்ச்சியில், பைனான்ஸ்சியர் பூபதி என்பவரிடம் 5 வட்டிக்கு கடன் வாங்கி தனது மகனை மருத்துவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார் கலைமணி.

இதற்கு காரணம், இட ஒதுக்கீடு அடிப்படையிலும், முதல் தலைமுறை பட்டதாரி என்பதாலும் 5 ஆண்டு மருத்துவ படிப்பு முடிந்த பின்னர் இவர் செலுத்திய மொத்த பணத்தில் 8 லட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை அரசு திருப்பி அளித்து விடும் என்பதால் அந்த நம்பிக்கையில் துணிந்து கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பூபதியிடம் 5 லட்சம் அளவிற்கு கடன் பெற்ற கலைமணி, அந்த கடனுக்கு வட்டிகட்ட மற்றவர்களிடம் கூடுதல் கடன் என்று ஒட்டு மொத்தமாக 8 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார்.

தினமும் அருகில் உள்ள சாக்கோ தொழிற்சாலையில் மூட்டை தூக்கும் வேலை தொடங்கி, கிடைக்கும் அனைத்து வேலைகளுக்கும் சென்று அதில் கிடைக்கின்ற பணத்தை கொண்டு கலைமணி, இதுவரை 4 லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஊரடங்கிற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் வரை கடனுக்கு மேல் கடன் வாங்கியும், தான் சம்பாதித்த பணத்தில் இருந்தும் முறையாக வட்டி கட்டி வந்த கலைமணியால் ஊரடங்கால் போதிய வேலை இல்லாமல், பைனான்சியர் பூபதியிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலவில்லை.

சிலர் கடனுக்குரிய வட்டியை கட்ட கலைமணிக்கு கால அவகாசம் கொடுத்த நிலையில், 5 வட்டிக்கு கடன் கொடுத்த பைனான்சியர் பூபதி என்பவர் மட்டும் ஒப்புக் கொள்ள மறுத்து கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

பைனான்சியர் பூபதிக்கு வட்டிக் கொடுக்க வேண்டிய நாள் நெருங்க நெருங்க இதயம் நொறுங்கிப்போன கலைமணி, சம்பவத்தன்று தன் தற்கொலை செய்து கொள்ள பூபதியின் கந்துவட்டி கொடுமைதான் காரணம் என்று வீடியோவாக பேசி வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட்டு விஷம் குடித்ததார்.

அவரது வாட்ஸ் அப் வீடியோவை பார்த்த உறவினர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிய கலைமணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கலைமணி வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோ அடிப்படையில் பைனான்சியர் பூபதி மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்த வெண்ணந்தூர் காவல்துறையினர் உடனடியாக பைனான்சியர் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூலிவேலையில் தனக்கு கிடைப்பது சொற்ப வருமானம் என தெரிந்திருந்தும், அவசரப்பட்டு 5 வட்டிக்கு பைனான்ஸியரிடம் கடன் வாங்கியது கலைமணியின் முதல் தவறு என்று சுட்டிக்காட்டும் வங்கி அதிகாரி ஒருவர், மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி உயர்கல்விக்கு வங்கியில் கடன் கிடைக்க வழிவகை செய்துள்ளதாகவும், கலைமணி அதனை பின்பற்றி வங்கியில் கடன் பெற்று தனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால், மருத்துவ படிப்பு முடித்த பின்னர் வரும் தொகையை வைத்து அவரது கடனை அடைக்க ஏதுவாக இருந்து இருக்கும் என்றும் அவரும் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி அவதிப்படும் சூழல் ஏற்பட்டு இருக்காது என்கிறார்.

அதே நேரத்தில் ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்காமல் கடனுக்கான தவணைத் தொகை கேட்டு தொல்லை செய்யும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளை போல தகுந்த உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பிக்கவேண்டும் என்பதே கடன் பெற்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Namakkal man struggling of usury interest attempt suicide | Tamil Nadu News.