'தனியார் பள்ளிக்கு சீல்...' 'ஆறாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்திருக்காங்க...' விஷயம் கேள்விப்பட்ட உடனேயே வந்து ஆக்சன்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் ஊரடங்கு நேரத்திலும் 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல் வைத்து மூடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்படைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 10-ம் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளார்.
மேலும் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதை பற்றி எந்த ஒரு கலந்தாலோசனையும், முடிவும் எடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கோவையில் இயங்கும் கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு நுழைவு தேர்வு நடத்தியதால் கோவை மாநில முதன்மை கல்வி அப்பள்ளிக்கு சீல் வைத்துள்ளார்.
கோவையின் டவுன்ஹால் பகுதியில் இருக்கும் இப்பள்ளிக்கு இன்று காலை சில மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்துள்ளனர். பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடைபெறுவதாக சில சமூக ஆர்வலர்களுக்குத் தகவல் வந்ததால் அவர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
புகாரை அடுத்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி, தெற்கு வட்டாட்சியர் முருகன் ஆகியோர் தனியார் பள்ளியை நேரில் சென்று ஆய்வு நடத்தி கிடைக்கப்பெற்ற தகவல் உறுதியாகியுள்ளது.
மேலும் இன்றும் மட்டும் சுமார் 50 மாணவர்களைப் பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, நடத்திய நுழைவுத் தேர்வையும் தடுத்து நிறுத்தினர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கூட்டம் கூடக் கூடாது என்பதால் பொதுத் தேர்வுகளே ரத்து செய்யப்பட்ட சூழலில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்த அதிகாரிகள், ஆட்சியரின் உத்தரவின் பெயரில் முதன்மை கல்வி அலுவலர் அப்பள்ளியை மூடி சீல் வைத்தனர்.
மேலும் இதேபோல் வேறெந்த பள்ளிகளிலாவது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவ்வாறு தேர்வு நடத்திய பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.