‘சொத்துக்காக மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நடந்த பயங்கரம்..’ அதிர்ச்சியில் பெற்றோர்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 12, 2019 03:24 PM

திருவண்ணாமலையில் சொத்துக்காக ஆசைப்பட்டு இளைஞர் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி.ரத்த ஊசி போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

HIV blood injected to differently abled person in Tiruvannamalai

மல்லவாடியை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் வெங்கடேசபெருமாள் (19). வாய்பேச முடியாத மூளை வளர்ச்சி குறைவாக உள்ள மாற்றுத்திறனாளியான அவருக்கு கையில் கட்டி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் தவித்துள்ளார். கட்டியை அகற்ற ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் யாருக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாதபோது அவருக்கு மட்டும் எப்படி வந்தது என அனைவரும் குழம்பியுள்ளனர். அவருக்கு போடப்பட்ட ஏதாவது ஊசி மூலமாக பரவியிருக்கலாம் என சந்தேகித்திருக்கின்றனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வெங்கடேசப்பெருமாளுக்கு கடந்த ஆண்டு காய்ச்சலுக்காக ஊசி போடுவதாகக் கூறி ஊசி போட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் அவரிடம் இதுபற்றி விசாரித்தபோது மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த இளைஞரின் பெற்றோர் இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “எனக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதை செல்வகுமார் கேட்டபோது நான் கொடுக்கவில்லை. சொத்துக்காக ஆசைப்பட்டே என் மகனைக் கொலை செய்ய இப்படி செய்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கூறுகையில், “மாற்றுத்திறனாளியான அவருக்கு எப்படி இது பரவியது எனத் தெரியவில்லை. பெற்றோர் புகாரில் கூறியுள்ளது உண்மையா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #HIV #DIFFERENTLYABLED