‘எத்தனை சோதனைகள், பழிச்சொற்கள், அவதூறுகள்..?’.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘முக்கிய’ அறிக்கை வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் திமுக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், திமுக இதுவரை 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,‘ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயக்க ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்கு கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக நினைக்கிறேன்.
எத்தனை-சோதனைகள்-வேதனைகள்-பழிச்சொற்கள்-அவதூறுகள்?- இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காவே உழைப்பேன். என்றென்றும் என் சிந்தனையும், செயலும் மக்களுக்காகத்தான்.
கோடான கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. தோள் கொடுத்த கூட்டணிக்கட்சித் தலைவர்கள்-தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் நன்றி.
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி!
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
உங்களுக்காக உழைப்பேன்!
உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.
தமிழகம் வெல்லும்! pic.twitter.com/w4rpr5Zeva
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
தமிழகத்தில் அமையப் போவது நாம் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது, அதைத் தமிழகம் இன்று சொன்னது. இனி தமிழகம் வெல்லும், அதை நாளைய தமிழகம் சொல்லும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.