'இதுவே தெரியாம 7 மாசமா ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கீங்க?'.. 'தவறான சிகிச்சையால் கொந்தளித்த குடும்பம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 25, 2019 12:47 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மணமான பெண்ணின் வயிற்றில் கட்டி இருப்பதை அறியாமல், கர்ப்பமாக இருப்பதாகக் கூறி 7 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சம்பவம் நடந்துள்ளது.

Cyst, Not pregnant, TN family accused govt hospital doctors

கிருஷ்ணகிரி அருகே சந்திரப்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேடியப்பன் - அஸ்வினி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் ஆகியதை அடுத்து, கடந்த 2019 மார்ச் மாதம், கல்லாவி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அஸ்வினியை சோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி தொடர்ந்து 7 மாதங்களுக்கு பேறு கால சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இப்படி ஒரு சூழ்நிலையில்தான், கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று அஸ்வினிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டிருக்கிறது.

அப்போது அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்தப் பார்த்தபோதுதான், அவருக்கு வயிற்றில் நீர்க்கட்டி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ந்த அஸ்வினியின் குடும்பத்தினர், கல்லாவி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அப்பகுதி வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனா சங்கர், பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு போன் செய்து பேசியதோடு, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : #HOSPITA #PREGNANCY