தாய்மை அடைந்ததற்காக வேலையைவிட்டு நீக்கிய பிரபல நிறுவனம்... நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Apr 04, 2019 05:41 PM
பெண் ஊழியர் ஒருவர் தான் தாய்மை அடைந்த காரணத்துக்காக, தன்னைப் பணி நீக்கம் செய்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
![ex employee says was fired after announcing pregnancy ex employee says was fired after announcing pregnancy](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/ex-employee-says-was-fired-after-announcing-pregnancy.jpg)
அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸில் பணியாற்றிய தானியா ஜாரக் என்ற பெண், அந்நிறுவனத்தில் சர்வதேச ஒரிஜினல்ஸ் பிரிவில் மேனேஜராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தானியா, தான் தாய்மை அடைந்திருப்பதை, அங்குள்ள தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அதன் பின்னர், உருவத் தோற்றத்தை வைத்து உயர் அதிகாரியான பிரான்சிஸ்கோ ரமோஸ் விமர்சித்தது மட்டுமல்லாமல், எவ்வித அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்ததாக தானியா குற்றஞ்சாட்டியுள்ளார். தன் தோற்றத்தையும் தனக்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
கொடுக்காத சம்பளம், போனஸ், வலி, வேதனை, மன உளைச்சல் என அனைத்துக்கும் சேர்த்து நஷ்ட ஈடு கேட்டு நெட்ஃப்ளிக்ஸ் மீது, லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தானியா ஜாரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனிடையே, இந்த வழக்கு குறித்துக் கருத்து கூறிய, நெட்ஃப்ளிக்ஸ் செய்தித் தொடர்பாளர், 'முன்னாள் ஊழியரான தானியாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. நெட்ஃப்ளிக்ஸ் எப்போதும் அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீது அக்கறைக் கொண்டது' என புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)