'லாரி பேட்டரில வச்சு கடத்தப்படும் நெதர்லாந்து பட்...' 'சென்னை வந்ததுக்கு பின்னாடி இருக்கும் நெட்வொர்க்...' 'சர்வதேச பின்னணி...' - அதிர வைக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உள்ள பணக்கார கல்லூரி மாணவர்களை குறி வைத்து நெதர்லாந்தில் விளையும் உயர்தர கஞ்சாவை விற்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சர்வதேச கஞ்சா கடத்தல் கும்பல் மூலம் சென்னையை சேர்ந்த இளைஞர்கள், சட்டத்திற்கு புறம்பாக நெதர்லாந்தில் இருந்து 'நெதர்லாந்து பட்' எனப்படும் முதல்தர கஞ்சாவை கடத்தி வந்து விற்கும் இளைஞர்கள் மயிலாப்பூரில் சிக்கியுள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாப்பூரில் தனிப்படை போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மயிலாப்பூர் ரயில் நிலையம் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அடிக்கடி இரு இளைஞர்கள் அங்குமிங்குமாறு திரிந்துள்ளனர்.
இதை நோட்டமிட்ட போலீசார் அவர்களை அழைத்து விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் மூன்றரைக் கிலோ கஞ்சா இருந்ததுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இளைஞர்கள் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த 26 வயதான சபாசக்தி மற்றும் மயிலாப்பூரைச் சேர்ந்த 21 வயதான யாசர் ஹனிபா என்பது தெரியவந்தது.
பிடிபட்ட இளைஞர்கள் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அசீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு லாரி பேட்டரியும் அதில் இருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பதில் பெயர் போன இந்த கும்பல் சென்னையில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணக்கார வீட்டு இளைஞர்களை குறிவைத்து விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபடும் யாசர் ஹனிபா என்னும் இளைஞர் சென்னையில் மிகப்பிரபலமான தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரைக் கிலோ கஞ்சா, நெதர்லாந்து பட் எனப்படும் முதல் தர கஞ்சா வகையைச் சேர்ந்தது என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
அசாமை சேர்ந்த கஞ்சா கும்பலுடன் சேர்ந்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது முதாசீர் என்பவர் கடத்தி விற்பனை செய்து வருவதாகவும், இவர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து லாரி பேட்டரிகளில் நெதர்லாந்து கஞ்சாவைப் பதுக்கி பிரபல கொரியர் சர்வீஸ் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வருகின்றனர்.
அதன்பின் பெங்களூருவில் இருந்து தென்மாநிலங்களுக்கு அதேபோல லாரி பேட்டரிகளில் பதுக்கி பிரபல கொரியர் சர்வீ்ஸ் மூலம் கடத்தப்படுகிறது. லாரி பேட்டரியில் கஞ்சாவை வைத்து அதனை கொரியர் சர்வீசில் அனுப்பி வைத்தால் எவ்வித போலீஸ் பிரச்சனையும் வராது என்பதால் போதை கும்பல் இந்த முறையைக் கையாண்டு வருகிறது.
மேலும் இந்த கும்பல் விற்கும் 'நெதர்லாந்து பட்' கஞ்சா ஒரு கிராம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்று போலீசார் கூறுகின்றனர். ஆனால் இவை, நெதர்லாந்து நாட்டில் மருந்துகள் தயாரிப்பிற்கு தனியாக வளர்க்கப்படுவதாகவும், அங்கு இவை ஒரு கிராம் 870 ரூபாய் முதல் 1,500 ரூபாய் விற்கப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து சுமார் மூன்றரைக் கிலோ கஞ்சா, கஞ்சா கடத்த பயன்பட்ட லாரி பேட்டரிகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.