BAKASURAN : "அமிர் சாரிடமிருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல.. பெரிய இயக்குனரே இப்படி சொல்வது வேதனையானது" - பகாசூரன் மோகன்.ஜி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியானது.
முன்னதாக இந்த திரைப்படத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “மோகன்.ஜி ஒரு இந்துத்துவவாதி என தனியே பிரித்து சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எச்.ராஜா, அண்ணாமலை ஆகியோர் மோகன்.ஜி படத்தை ஓடிவந்து பார்த்து ஆதரவு கருத்து சொல்கிறார்கள். ஏன் இவர்கள் அசுரன் பார்க்கவில்லை, ஏன் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், காலா, கபாலி படங்களை பார்க்கவில்லை. பார்த்து கருத்தை முன்வைக்கவில்லை. இந்த கேள்வி வரும்போது அது உறுதிசெய்யப்படுமா இல்லையா? இந்த ஆரோக்கியமற்ற சூழலை வடநாட்டில் உருவாக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் உருவாக்கப் பார்க்கிறார்கள்” என இயக்குநர் அமீர் சொல்லியிருக்கும் கருத்து குறித்து, பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “அமிர் சாரிடமிருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல னா.. ஒரு படைப்பு உருவாக்குவது எவ்வளவு கடினம் என அவருக்கு நன்றாக தெரியும்.. கடனை வாங்கி மக்களுக்கு விழிப்புணர்வு சொல்றேன்.. பெரிய இயக்குனரே இப்படி சொல்வது வேதனையானது.” என தெரிவித்துள்ளார்.