'16 வருஷம் கழிச்சு வயிற்றில் உருவான கரு'... 'புள்ளத்தாச்சி மனைவியின் ஆசை'... 'சந்தோசமாக நிறைவேற்றிய அதிமுக எம்எல்ஏ'... நெகிழ வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான ஒவ்வொருவருக்கும் தாங்கள், பெற்றோர்கள் ஆக வேண்டும் என்பது நிச்சயம் பெரிய கனவாகவே இருக்கும். அதுகுறித்து மனதில் பல கனவுகளை அவர்கள் வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லையே என்று எங்கும் தம்பதியரின் வலியை வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அந்த வகையில் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தந்தை ஆகியுள்ள நிலையில், அவர் தனது மனைவியின் ஆசையையும் நிறைவேற்றியுள்ளார். அந்த நெகிழ வைக்கும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எஸ்.நாகராஜன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனாலும் அவரது மனதில் ஆறாத வடு ஒன்று இருந்தது. அது நமக்கென்று ஒரு குழந்தை இல்லையே என்பது தான் அந்த ஏக்கம். கடந்த 2003-ம் ஆண்டு திருமணமான, நாகராஜனுக்குத் திருமணமாகி 16 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. இந்த சூழ்நிலையில் 16 வருடங்களுக்குப் பிறகு அவரது மனைவி கருவுற்றார்.
வார்த்தையால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்த நாகராஜன் மனைவியை நன்றாகக் கவனித்துக் கொண்டார். மேலும் மனைவிக்கு, தொடக்கத்திலிருந்து பிரசவிக்கும் வரை, தனியார் மருத்துவமனைக்குச் செல்லாமல் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில்தான் மருத்துவம் பார்த்து வந்துள்ளார் நாகராஜன். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியம் ஒளிந்துள்ளது. எத்தனையோ தனியார் மருத்துவமனைகள் வந்துவிட்ட நிலையிலும், நாகராஜனின் மனைவி தனக்கு அரசு மருத்துவமனையில் தான் பிரசவம் நடக்க வேண்டும் எனத் தனது ஆசையைக் கணவனிடம் கூறியுள்ளார்.
மனைவியின் ஆசையை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய நாகராஜன், 16 ஆண்டுகள் கழித்து நாகராஜனின் மனைவி சிவசங்கரிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக, தான் இருக்கும் வகையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் நாகராஜனைப் பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினார்கள்.
இதற்கிடையே இதே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி குழந்தைகள் பிரிவு வார்டு அருகில் தான், கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாய், சேய் இருவரும் இன்று நலமுடன் வீடு திரும்பினர். கர்ப்பிணி மனைவி பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட நிலையில் அதை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் நாகராஜனின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்
