'புரளி கிளப்ப கூடாது'...'மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமீன்'... 'ஆனா, நீதிபதி சொன்ன அபராத தொகை எவ்வளவு தெரியுமா'?... நீதிமன்றம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மன்சூர் அலிகானுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டிலிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
மருத்துவமனையிலிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்தும், கொரோனா குறித்தும் அவதூறுச் செய்திகளைத் தெரிவித்தார். பொதுமக்களிடையே கரோனா பெருந்தொற்று இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி வருவதாக அவர் கூறினார். யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும், இதயத்தில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாகத்தான் இந்த நிலைமைக்குச் சென்றார் என்றும் மன்சூர் அலிகான் பேட்டியில் தெரிவித்தார்.
மன்சூர் அலிகான் அளித்த பேட்டி வைரலான நிலையில், மன்சூர் அலிகானின் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே தான் கைது செய்யப்படாமல் இருக்கச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. பின்னர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்ற தனி நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, ''தடுப்பூசி குறித்து புரளி பரப்பக் கூடாது. பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்று அறிவுறுத்திய நீதிபதி, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அபராதத் தொகையைத் தடுப்பூசி வாங்குவதற்காகத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் வரைவோலையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மற்ற செய்திகள்
