"நம்மாழ்வார் ஐயா புரட்சியை உருவாக்கி இருக்கார்".. தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை..
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நடத்திய விருதுகள் வழங்கும் விழா இன்று (26.01.2023) நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யாவும் கார்த்தியும். சமூக அக்கறையோடு பல முன்னெடுப்புகளை இருவரும் செய்துவருகின்றனர். சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கல்வி சம்மந்தமான பல முன்னெடுப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதுபோல விவசாயத்தில் ஈடுபாடுள்ள நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்.
இன்று உழவன் பவுண்டேஷன் சார்பில் விவசாயிகளுக்கு உழவன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவக்குமார், நடிகர் ராஜ் கிரண், பொன் வண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, "நம்மாழ்வார் ஐயா ஒரு ஆள் எத்தனை வருடம் போய் ஊர் ஊராக அழைந்து பேசி பேசி, இங்கே வர்றவங்க அத்தனை பேரும் அவர் பெயரை தான் சொல்றாங்க. இது தான் நான் அடுத்த புரட்சி என்று நினைக்கிறேன். எந்த பக்கம் போய் சேர்ந்தாலும் எங்கே ஆரம்பிச்சது என்று பார்த்தால் நம்மாழ்வார் ஐயா ஏற்கனவே சொன்னாருங்கனு சொல்றாங்க. அவரை நான் பாத்துருக்கேன். அவர் புக் படிச்சுருக்குன். அவர் வீடியோ பாத்துருக்கேன்னு சொல்றாங்க. அவ்வளவு பெரிய புரட்சியை நம்மாழ்வார் உருவாக்கி இருக்கிறார். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம்முடைய கடமை. இந்த இடத்தில் அரசாங்கத்துக்கு வைக்கும் மிகப் பெரிய கோரிக்கை. அரசு ஒழுங்குமுறை ஆணையத்தில் சிறு தானியங்களுக்கான செயல்முறை யூனிட்டுகளை ஏற்படுத்தி தர வேண்டும். நெல்லுக்கு இருக்கும் செயல்முறை யூனிட்டுகள் சிறு தானியங்களுக்கு சரி வராது. அதேபோல் அதிகாலையில் விவசாயிகளுக்கு அவர்களது பொருட்களை சந்தைக்கு கொண்டு வர பொது போக்குவரத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்." என கார்த்தி பேசினார்.