பரபரப்பாக போய்க்கிட்டு இருந்த மேட்ச்.. திடீரென 12-வது வீரரிடம் ‘துண்டுச்சீட்டு’ கொடுத்து அனுப்பிய டிராவிட்.. என்ன மெசேஜ் அது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது திடீரென வீரர் ஒருவரிடம் ராகுல் டிராவிட் துண்டுச்சீட்டு கொடுத்து அனுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இலங்கைக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி வெற்றி பெற குறைவான இலக்கே நிர்ணயிக்கபட்டுள்ளதால், ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறி வந்தனர்.
அப்போது 18-வது ஓவரின் போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது. அந்த சமயம் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 12-வது வீரரான சந்தீப் வாரியரிடம் ஒரு துண்டுச்சீட்டை கொடுத்து மைதானத்துக்குள் அனுப்பினார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்படி டிராவிட் என்ன மெசேஜ் சொல்லி அனுப்பினார்? என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
போட்டியின் 18-வது ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்திருந்தது. அதனால் 12 பந்துகளுக்கு 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி இருந்தது. ஒருவேளை மீண்டும் மழை பெய்து போட்டி நிறுத்தப்பட்டால், Duckworth–Lewis விதிப்படி எந்த அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்படும். அப்படி நடந்தால் இலங்கை அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவை இருந்தது. இதனை மனதில் வைத்து விளையாடுமாறு இந்திய வீரர்களுக்கு ராகுல் டிராவிட் அறிவுறுத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது, இதேபோல் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த தீபக் சஹாருக்கு டிராவிட் சில அறிவுரைகளை சொல்லி அனுப்பினார். இதன்பின்னர் அவர் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்றைய போட்டியில் மீண்டும் மழை குறுக்கிடவில்லை. அதனால் 19.4 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் இன்று (29.07.2021) கொழும்பு மைதானத்தில் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது.