‘அவருக்கு அந்த பையனோட ஆட்டம் பிடிச்சு போச்சு’.. டிராவிட்டை திரும்பிப் பார்க்க வைச்ச அந்த இலங்கை வீரர் யார்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை இளம் பந்துவீச்சாளரின் ஆட்டம் ராகுல் டிராவிட்டை கவர்ந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் இளம் வீரர் துஷ்மந்தா சமீராவின் (Dushmantha Chameera) பந்து வீச்சு ராகுல் டிராவிட்டை கவர்ந்துள்ளதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார். அதில், ‘துஷ்மந்தா சமீரா தனது பவுலிங்கை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார். அவர் ஒரு அற்புதமாக பவுலர். சமீபத்தில் ராகுல் டிராவிட்டுடன் பேசினேன். அப்போது சமீராவின் பவுலிங் அவரை கவர்ந்துள்ளது எனக்கு தெரியவந்தது’ என மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா கவனிக்கதக்க வீரராக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் மட்டுமே 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் முக்கியமான நேரங்களில் ரன்கள் செல்வதை கட்டுப்படுத்தி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
அதேபோல் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிரித்வி ஷாவை அவுட்டாகி அசத்தினார். அதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவை 10 ரன்களில் அவுட்டாக்கினார். முன்னதாக, 2-வது ஒருநாள் போட்டியின்போது துஷ்மந்தா சமீராவின் பவுலிங் குறித்து ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.