“வெறும் வெள்ளரிக்காய், பிரெட் சாப்பிட்டு கிரிக்கெட் விளையாடுவேன்”.. இதுவரை யாருக்கும் தெரியாத CSK வீரரின் உருக்கமான பின்னணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, தனது கிரிக்கெட் பயணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியின் பூர்வீகம் பாகிஸ்தான். அவருடைய தாத்தா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு வேலைக்காக வந்துள்ளார். மொயின் அலி பிறந்தது இங்கிலாந்தில்தான். இவரின் தந்தை முனிர் அலி மனநல மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில் தனது கிரிக்கெட் பயணம் குறித்து மொயின் அலி பகிர்ந்துள்ளார். அதில், ‘நான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு என் அப்பா தான் காரணம். அவர் எப்போதும் அவரது ஆசையை எங்கள் மீது திணிக்கவில்லை. இப்படி செய்தால் நல்ல நிலமைக்கு வரலாம் என்று வழி மட்டும் காட்டினார். 13 வயதில் இருந்து 15 வரை கிரிக்கெட்டிற்காக கடினமாக உழைத்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்றார்.
எங்களை தினமும் மைதானத்துக்கு அழைத்து செல்வார். அவர் வேலை முடிந்து வந்ததும் எங்களுக்கு பயிற்சி கொடுப்பார். அப்போது எங்களிடம் அவ்வளவு பணம் இருக்காது. கையில் ஒரு பவுண்ட் மட்டும் தான் இருக்கும். அதை வைத்து தான் குடும்ப செலவை சமாளித்தோம். எங்களுக்கு சாப்பிட உணவு இருக்காது. வெறும் வெள்ளரிக்காய், பிரெட்களை சாப்பிட்டு கிரிக்கெட் விளையாட செல்வோம்.
ஒரு முறை நான் அணி தேர்வுக்கு செல்ல இருந்தேன். ஆனால் என்னிடம் கிரிக்கெட் உபகரணங்கள் எதுவுமே இல்லை. உடனே என் அப்பா அவரது நண்பரின் மகனிடம் உள்ள உபகரணங்களை வாங்கி கொடுத்தார். அதை வைத்து தான் அணி தேர்வுக்கு சென்றேன். மற்றவர்களை விட நாம் அதிகம் உழைக்க வேண்டும் என்று பயிற்சி செய்வேன். இப்போது நான் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டேன். ஆனால் என் கடின காலங்களை என்றும் மறந்ததில்லை’ என மொயின் அலி உருக்கமாக பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
