"ராயுடுவுக்கு இது கடைசி ஐபிஎல் சீசனா??.." குழம்பி போன ரசிகர்கள்.. "அவரோட முடிவு இதுதான்.." சிஎஸ்கே சிஇஓ கொடுத்த விளக்கம்.. வெளியான தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய (14.05.2022) போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகிறது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஒரு பக்கம், குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
ஓய்வு முடிவை எடுத்த 'சிஎஸ்கே' வீரர்?
பிளே ஆப் சுற்றின் மற்ற 3 இடங்களுக்காக, ஏறக்குறைய 7 அணிகளும் போட்டி போட்டு வருகிறது. இதனிடையே, பிரபல சிஎஸ்கே வீரர் ஒருவர், நடப்பு ஐபிஎல் தொடருடன் அதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பல சீசன்களாக ஆடி வருபவர் அம்பத்தி ராயுடு. நடப்பு தொடருக்கு முன்பாகவும், ராயுடுவை மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இதனையடுத்து, மொத்தம் 12 போட்டிகள் ஆடியுள்ள ராயுடு, அதில் 271 ரன்களை எடுத்துள்ளார். ஏற்கனவே, பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நாளை (15.05.2022) மோதவுள்ளது.
"இதுதான் கடைசி ஐபிஎல்.."
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ராயுடு ஒரு ட்வீட்டை பகிர்ந்திருந்தார். அதில், "இது தான் என்னுடைய கடைசி ஐபிஎல் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 ஆண்டுகளாக, இரண்டு சிறந்த அணிகளில் பங்குபெற்று ஆடியது, மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்காக மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்ல விரும்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
குழம்பிய ரசிகர்கள்
இந்த ட்வீட் வேகமாக வைரலான நிலையில், பல கிரிக்கெட் பிரபலங்களும் ராயுடுவின் கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அப்படி இருக்கையில், பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியும் விட்டார் ராயுடு. இதனால், ரசிகர்கள் அனைவரும் ஒன்றும் புரியாமல் குழம்பி போயினர்.
விளக்கம் சொன்ன சிஇஓ
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில், ராயுடு ஆடுவாரா மாட்டாரா என்றும் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். இதனையடுத்து, ராயுடு முடிவு பற்றி, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவலின் படி, "நான் ராயுடுவிடம் இது பற்றி பேசினேன். அவர் ஓய்வு பெறவில்லை. நடப்பு சீசனில் அவர் சிறப்பாக செயல்படாததால் சற்று ஏமாற்றம் அடைந்து அந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார். ஆனால், அதனை அவர் நீக்கியும் விட்டார். அதே போல, நிச்சயமாக அவர் ஓய்வு பெறவில்லை" என காசி விஸ்வநாதன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.